Wednesday, December 31, 2008

புத்தாண்டு சிந்தனைகள்-2009

புத்தாண்டு பிறப்பென்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது
வாழ்த்துக்களை பரிமாறிகொள்வதும், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் ,
செல்வ செழிப்பில் மிதப்பவர்கள் விடுதிகளுக்கு சென்று குடித்து கூத்தடித்து கும்மாளமிடுதலும்,
வீட்டில் நன்றாக இயங்கும் பொருட்களை
தள்ளுபடி மோசடியில் மயங்கி தள்ளிவிட்டு
புதிய பொருட்களை அதன் இலவசங்களுடன்
வீட்டில் வாங்கி அடுக்கி வருவதும்தான்
சமீப காலமாக நம் நாட்டில் வருடந்தோறும்
நடைபெற்றுவரும் சடங்கு .
ஒரு சிலர் வித்தியாசமாக மனநல காப்பகம்,
ஆதரவற்றோர் ,முதியோர் நல விடுதிகள் ,மருத்துவமனைகள்
போன்றவற்றிற்கு சென்று அங்குள்ளோருக்கு இனிப்புகள்,
உதவிகள் வழங்கி புத்தாண்டை கொண்டாடுவதும் உண்டு.
ஆனால் உண்மையில் புத்தாண்டு என்று ஒன்றும் கிடையாது.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது
என்றான் மகாகவி பாரதி.
மேலும் அவன் இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம் என்றான்.
எனவே ஒவ்வொரு மனிதனும் புத்தாண்டு தொடக்கம் அன்று
மேற்கண்ட சடங்குகளை முடித்தவுடன் சில தீர்மானங்களை
மனதில் நிறுத்தி அவைகளை இந்த ஆண்டில்
எப்பாடு பட்டாவது நிறைவேற்றி தீரவேண்டும் என்ற
உறுதியை கைகொள்ளுவார்கள் என்றால்
அது அவர்களின் வாழ்வில் வெற்றியையும்
உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கும்
என்பதில் ஐயமில்லை .
கடந்த ஆண்டில் துவக்க நினைத்து
நிறைவேறாத பணிகளை நடைபெறும் ஆண்டில் முடிக்கவும்,
புதியதாக பணிகளை துவக்கவும்,
தன்னிடம் உள்ள விரும்பத்தகாத ,
முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த
தீய குணங்களை விட்டொழிக்கவும்,
எதிர்மறையான சிந்தனைகளை அகற்றி
நேர்மறையான சிந்தனைகள் மனதில் வளர்த்துக்கொள்ளவும் ,
வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு முறையை கொண்டுவர செய்வது ,
அனைவரிடமும் நட்பாக பழகுவது போன்ற
பல நல்ல தீர்மானங்களை கைக்கொள்ள
உறுதி மேற்கொள்வதுதான் புத்தாண்டு தினத்தில்
முக்கியமாக செய்யவேண்டியது
அவ்வாறு செய்தால் கோள்கள் நிலை எப்படி இருப்பினும்
நம்வாழ்க்கை வெற்றியை நோக்கி பயணம் செய்யும்
என்பதில் ஐயமில்லை.

No comments: